back to top
-10.3 C
New York
Wednesday, January 22, 2025

Buy now

மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத விசயங்களை சொல்லும் காதல் கதை ‘குப்பன்’ ! இசை வெளியீட்டு விழாவி நடிகர்,டைரக்டர் சரண்ராஜ் பேச்சு!

விஜய் இன்று முன்னணி நடிகரானதற்கு அவரது தந்தை எஸ்.ஏ.சி தான் காரணம் – ‘குப்பன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரண்ராஜ் பேச்சு

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, ’அண்ணன் தங்கச்சி’, ‘எதார்த பிரேம கதா’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர், தற்போது ‘குப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் சரண்ராஜின் இளையமகன் தேவ் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக ஆதிராம் அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுக நடிகை சுஷ்மிதா நடிக்க, மற்றொரு நாயகியாக பிரியா அருணாச்சலம் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் சரண்ராஜ் நடித்திருக்கிறார்.

சோனி ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ஒய்.சரண்ராஜ் இயக்க, அறிமுக இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை இசையமைக்கிறார். ஆர்.ஜனார்த்தனன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பு செய்கிறார். ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, நடனக் காட்சிகளை டயானா வடிவமைத்திருக்கிறார். இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் கே.சுரேஷ் குமார் பாடல்களையும் எழுதியுள்ளார். கலை செல்வி ஒப்பனை பணியை கவனித்துள்ளார். புரொடக்‌ஷன் டிசைனராக தங்கராஜ் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக ஜான்சன் பணியாற்றுகிறார். டிசைனராக வெங்கட் பாபு பணியாற்றுகிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘குப்பன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் தேஜ் சரண், தயாரிப்பாளர் அஸ்வத் ஆகியோருடன் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் முத்துழகர் சாமி பேசுகயில், “என்னுடைய முதல் மேடை இது, நான் தவறாக பேசினால் மன்னிக்கவும். ‘கோலிசோடா’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘கடல்’, ‘கொடிவீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அனைத்து படங்களிலும் வெவ்வேறு கெட்டப்பில் இருப்பேன், அதனால் என்னை யாருக்கும் சரியாக தெரிவதில்லை. என்னை ஒரு நடிகராக கண்டுபிடித்து அழைத்து வந்தவர் இந்த படத்தின் இணை இயக்குநர் சுரேஷ் குமார் தான். என்னை அவர் சரண்ராஜ் சாரிடம் அழைத்து சென்றார், அவர் என்னை பார்த்ததும், ஓகே, இவர் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருப்பார், என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 600 படங்கள் வரை நடித்தவர், இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார், சில படங்களை இயக்கியிருக்கிறார், அவருடன் நடிப்பது எனக்கு பெருமையாக இருந்தது. படப்பிடிப்பின் போது என்னுடைய நடிப்பை பார்த்து அவர் கைதட்டினார், அதை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவர் எனர்ஜியான மனிதர், நெருப்பு போல பணியாற்றுவார், அவரைப் போல் எனர்ஜியான மனிதரை நான் பார்த்ததில்லை. இப்படி ஒரு ஜாம்பவான் படத்தில் நான் நடித்தது பெருமையாக இருக்கிறது. எஸ்.ஏ.சி, பாக்யராஜ் சார் உள்ளிட்டவர்கள் வரிசையில் தன்னுடைய மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார், அதற்கு நீங்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்பதால், தனுஷ் மற்றும் விஷால் ஆகியோருக்கு ரெட் கார்டு போட்டிருப்பது வருத்தமளிக்கிறது. எந்த ஒரு விசயமாக இருந்தாலும் பேசினால் தீர்வு கிடைத்து விடும், அப்படி செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சரியில்லை. எங்களைப் போன்ற சிறிய நடிகர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனக்கு குப்பன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த சரண்ராஜ் சார், சுரேஷ் சாருக்கு நன்றி.” என்றார்.

‘குப்பன்’ படத்தின் இரண்டாவது கதாநாயகன் ஆதிராம் பேசுகையில்,
“தமிழ் தெரியாமல் எப்படி பாட்டு பாடினேன் என்று என்னிடம் கேட்கிறார்கள். பாட்டு பாடுவதற்கு மொழி முக்கியம் அல்ல, பயிற்சி தான் முக்கியம். அப்படி பயிற்சி செய்து தான் நான் பாட்டு பாடினேன், வசனமும் பேசினேன். நாயகனுக்கு ஒரு நண்பர் இருப்பார் அது தான் நான்.இந்த படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. மீனவர்கள் எப்படி கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை இந்த படத்தில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். எனக்கு சரண்ராஜ் சார் தான் இந்த வாய்ப்பளித்தார். எனக்கு தமிழ் தெரியாது என்றாலும், அவரது பயிற்சியினால் நல்லபடியாக நடித்து முடித்தேன். மேலும் பல தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். இங்கு வந்திருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் இணை இயக்குநர் சுரேஷ் குமார் பேசுகையில், “நான் இந்த படத்திற்கு இணை இயக்குநராக பணியாற்றியிருப்பதோடு, பாடல்களும் எழுதியிருக்கிறேன். முதலில் டம்மி வார்த்தைகளை மட்டும் தான் எழுதினேன். அந்த வரிகளை பார்த்த சரண்ராஜ் சார், எனக்கு தேவையான அனைத்து வரிகளும் இதில் இருக்கிறது, எனவே அனைத்து பாடல்களையும் நீயே எழுது என்று கூறி இந்த வாய்ப்பளித்தார்.

தேவ் ஒரு பெரிய ஹீரோ ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவர். ஒரு பெரிய ஹீரோ அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்கள் தேவை அதிகமாகும். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி தேவ், தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது ஹீரோ ஆதிராம் தமிழ் தெரியாவர் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். சினிமாவை அவர் எந்த அளவுக்கு காதலிக்கிறார் என்பதை படம் பார்க்கும் போது நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். இசையமைப்பாளர் இளை சிறந்த கலைஞர். ஏற்கனவே அவர், தொடர்ந்து 36 மணி நேரம் கிட்டார் வாசித்து கின்னஸ் சாதனை புரிந்து சாதித்திருக்கிறார். இந்த படத்தின் மூலமும் சாதிப்பார். பாடல் எழுத என்னை அனுமதித்த அவருக்கும் என் நன்றி.

நாயகி சுஷ்மிதா பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பார், ஆனால் நடிப்பில் மிரட்டியிருக்கிறார், அவருக்கு விருது நிச்சயம். இப்படி படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களுக்கான படம், தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான படம். இப்படி ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சரண்ராஜ் சாருக்கு நன்றி.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஓம்பிரகாஷ் பேசுகையில்,
“’பாட்ஷா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற படங்களை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த படங்களில் டெரராக பார்த்த சரண்ராஜ் சாரை நேரில் பார்க்கும் போது குழந்தையாக இருந்தார். அவர் மகன்களிடம் தந்தையாக அல்லாமல் நண்பராக பழகுகிறார். இந்த படத்திற்கு கனல் கண்ணன் மாஸ்டர், சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் போன்ற பெரிய மாஸ்டர்களை ஸ்டண்ட் மாஸ்டராக போட பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சரண்ராஜ் சார் தான் ஓம்பிரகாஷ் நீ வந்து பண்றா என்று என்னை உரிமையோடு அழைத்தார், அவருக்கு என் நன்றி. தேஜுடன் பணியாற்றியிருக்கிறேன், இப்போது அவரது தம்பி தேவ் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை பேசுகையில், “என்னுடைய முழு பெயர் இளையராஜா, இசையமைப்பாளராக வந்ததால் இளை என்று வைத்துக்கொண்டேன். நான் டிரம்மராக தான் சரண்ராஜ் சாரிடம் அறிமுகம் ஆனேன். ஆனால் அவர் என்னை இசையமைப்பாளராக்கி விட்டார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. நான்கும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களுக்கும், படத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜனார்த்தனன் பேசுகையில்,
“சரண்ராஜ் சாருடன் எனக்கு இது நான்காவது படம். மூன்று படங்களில் சதாப்தி வேகத்தில் பயணித்தவர், இந்த படத்தில் வந்தே பாரத் வேகத்தில் பயணித்தார். அவரை பின் தொடர்வது கடினமாக இருந்தது. என்னிடம் இந்த கதை சொன்னவுடன், ஹீரோ மற்றும் ஹீரோயினை அறிமுகப்படுத்தினார். அவர்களை பார்த்தபோது கதை வெயிட்டாக இருக்கிறதே, இவர்கள் தாங்குவார்களா? என்று யோசித்தேன், ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய போது இருவரும் மிரட்டி விட்டார்கள். அவுட்புட் மிக சிறப்பாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவளித்து படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என்றார்.

நடிகர் ஹைட் கார்த்தி பேசுகையில்,
“அனைவருக்கும் வணக்கம், நான் ஏற்கனவே சரண்ராஜ் சாருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படத்தில் எனக்கும், அவருக்கும் நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறது. ஒரு காட்சியில் அவர் என் தலைமுடியை பிடித்து தள்ள வேண்டும். அப்போது அவர் அதை செய்யும் போது, “சார் இதை இப்படி செய்ய கூடாது” என்று சொன்னேன், அப்போது அவர் நீ பண்ணுடா சரியாக இருக்கும், என்றார். அந்த காட்சி முடிந்த பிறகு அனைவரும் கைதட்டினார்கள். அது தான் அவரது அனுபவம், மிகப்பெரிய ஜாம்பவான். அவர் படத்தில் நடிப்பது என் பாக்கியம். இந்த படத்தில் நடிப்பு ரீதியாக பல விசயங்களை கற்றுக்கொண்டேன்.

600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனுபவம் பெற்ற சரண்ராஜ் சார் முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு இளங் காதல் கதையாக இப்படத்தை டைரக்ட் செய்துள்ளார் சரண்ராஜ் சார். புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். தேவ், ஆதிராம் என அனைவரும் நட்பாக பழகினார்கள். நடித்ததோடு ஒரு பாடலும் பாடியிருக்கிறேன். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.

நடிகை சுஷ்மிதா பேசுகையில்,
“இந்த படத்தின் மூலம் நான் ஹீரோயினாக அறிமுகம் ஆவதை பெருமையாக நினைக்கிறேன். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஜாம்பவான் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பளித்த சரண்ராஜ் சாருக்கு நன்றி. அவர் படம் இயக்குவதோடு, எங்களுக்கு நடிக்கவும் சொல்லிக் கொடுப்பார். தேவ், ஆதிராம் மற்றும் நான் என அனைவரும் ஃபிரஷ்ஸாக தான் வருவோம், எங்களுக்கு அனைத்தையும் சரண்ராஜ் சார் தான் சொல்லிக் கொடுப்பார். நாங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள் போல் தான் படத்தில் பணியாற்றினோம். எங்களுக்கு அனைத்து விசயங்களையும் அவர் சொல்லிக் கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தை திரையரங்கில் பார்த்து நீங்கள் சப்போர்ட் பண்ண வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் தேவ் பேசுகையில்,
“இந்த படக்குழுவில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. நான் என் நண்பர் வீட்டில் இருந்து வீட்டுக்கு வந்த போது, என் அப்பா சுவரை பார்த்து ஏதோ யோசிச்சிட்டு இருந்தார், அப்போது நான் அவரை கிராஸ் பண்ண உடன், அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. கொஞ்சம் நேரம் என்னை பார்த்துவிட்டு, ஆபீஸ் வந்துவிடு என்றார். மறுநாள் போன போது எனக்கு கதை சொன்னார்கள். கதை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். நீதான் ஹீரோ என்றார்.
ஓ.. இதுக்காகதான் வீட்டில் அப்படி பார்த்தாரா அன்று நினைத்து விட்டு, நான் நடிக்க சம்மதம் சொன்னேன். அன்று தொடங்கிய படம் அதிவேக பயணத்தில் முடிந்தது. எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. நான் புதியவன் என்றாலும் எனக்கு அனைவரும் பெரிய ஆதரவு அளித்தார்கள். குறிப்பாக இணை இயக்குநர் சுரேஷ் சார் மற்றும் உதவி இயக்குநர்கள் எனக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் நான் அறிமுகம் என்பதை புரிந்துக்கொண்டு என்னை நல்ல வேலை வாங்கினார். எனக்கு நல்ல அனுபவமாக இந்த படம் அமைந்தது. நிச்சயம் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்.” என்றார்.

கன்னட தயாரிப்பாளர் அஸ்வத் பேசுகையில்,
“தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும், கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் வரும், எதாவது தப்பு இருந்தால் மன்னித்து விடுங்கள். சினிமா என்பது ஒரு குடும்பம் தான், நான் புதிதாக சினிமாவுக்கு வந்திருக்கிறேன், தயாரிப்பாளராக. என் குழுவில் இருக்கும் 300 பேர்களில் முக்கியமானவர் சரண் சார் தான். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதியவர்கள் தான். உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்தை செய்திருக்கிறோம். ஆடிசன் செய்து தான் அனைவரையும் தேர்ந்தெடுத்தோம். நம்ம குழுவுக்கு பெரியண்ணா என்றால் சரண்சார் தான். சினிமாவுக்கு நான் வந்ததற்கு காரணம், இதையும் நான் என் குடும்பமாக பார்க்கிறேன். படத்தின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், இதை கஷ்ட்டப்பட்டு தான் செய்திருக்கிறார்கள். சரண்சார் எனக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணியிருக்கார். நம்ம படக்குழுவுக்கு நிறைய விசயங்களை சொல்லிக்கொடுத்தது சரண்சார் தான். பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி, நீங்க இருந்தால் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் நடிகர் சரண்ராஜ் பேசுகையில்,

வேலை எதுவும் இல்லனா, எதாவது ஒண்ணு உருப்படியா பண்ணுடான்னு பெரியவங்க சொல்வாங்க. அதுபோல், நடிப்பு தான் எனக்கு தெரியும், கை நிறைய பணம் கொடுத்தால் கூட எண்ண தெரியாது. ஆனால் நடிக்க கூப்பிட்டால், இரவு பகலாக நடிப்பேன்.
என்னால் சும்மா வீட்டில் உட்கார முடியாது.
600 படங்களில் நடித்துவிட்டேன், அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். இப்போது இசை, இயக்கம், கதை என்று பண்ணிட்டு இருக்கேன்.

நான் வழக்கமா வீட்ல இருந்தா மாலை நேரம் நாயை கூட்டிட்டு பீச் வழியாக போவேன், தனியாக ஒரு இடத்தில் இருக்கும் படகில் உட்கார்ந்து நாய் கூட விளையாடுவேன். அங்கே ஒரு நண்பர் குப்பன் எனக்கு பழக்கம். சின்ன குப்பன் என்று அழைப்பார்கள். நான் எப்போ போனாலும் அவரும் வருவார், அவருடன் பேசிட்டு இருப்பேன். ஒரு நாள் என் கிட்ட வந்து நீங்க சினிமாவில் 30 வருடங்களாக இருக்கிறீர்கள், ஆனால் மீனவர்கள் பற்றி, அவங்க வாழ்க்கை பற்றி படம் பண்ண மாட்றீங்களே என்று வருந்தி சொன்னார். கடல் பற்றி, மீனவர்கள் கஷ்ட்டப்படுவதை படம் பண்ணுங்கன்னு சொன்னார்.

அன்று இரவு முழுவதும் அதை தான் யோசித்தேன், சரி மீனவர்கள் பற்றி என்ன கதை எழுத முடியும் என்று யோசித்தேன். 12 மணிக்கு ஒரு லைன் வந்தது, ஒரு மீன் பிடிக்கிற பையன், ஒரு ஜெயின் பெண், சைவம் – அசைவம், இங்கு என்ன நடக்குது, அது தான் ’குப்பன்’.

கதை ரெடியான போது தான் கொரோனா வந்தது, நம்ம பைலட் பத்து நாட்கள் டெல்லி, பத்து நாட்கள் மும்பை என்று சுற்றி கொண்டிருந்தார் அப்போது நான் சொன்னேன், இப்படி ஊர் ஊராக சுற்றுவதை விட்டுட்டு, ஐதரபாத்தில் என் நண்பர் இருக்கிறார். அவரிடம் சென்று நடிப்பி பயிற்சி எடுத்துக்கொள் என்றேன், உடனே அவன் அங்கு சென்றுவிட்டான். என் நண்பன் என்னிடம் நீ இவன ஹீரோவாக்குறத விட்டுட்டு பைலட்டாக்கிட்டியே, என்று சொன்னார். பசங்க என்ன கேட்கிறார்களோ அதை தானே செய்ய முடியும். என் பெரிய பையன் ஹீரோவாக வேண்டும் என்றார் ஹீரோவாக்கினேன், இவர் பைலட் ஆக வேண்டும் என்று சொன்னார் பைலட்டாக்கி விட்டேன், என் மகள் இண்டரியர் டிசைனராக வேண்டும் என்று சொன்னார் அதன்படி செய்தேன். பிள்ளைகள் என்னவாக ஆசைப்படுகிறார்களோ அதை நிறைவேற்றுவது தானே தந்தையின் கடமை, அதை தான் நான் செய்தேன். அப்படி என் நண்பரிடம் மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டவர், வீடு திரும்பி வந்தார், அப்போது அவரை பார்த்தபோது எனக்கு நம்ம கதைக்கு சரியாக இருப்பானே என்று தோன்றியது. உடனே அலுவலகம் வர சொன்னேன். அதற்கு முன்பு ஹீரோவாக யாரை போடலாம் என்று பலரை பரிசீலித்தோம், ஆனால் எதுவும் செட்டாகவில்லை. தேவ் அலுவலகம் வந்த போது நம்ம கதைக்கு இவன் தான் ஹீரோ என்றேன், சுரேஷ் உடனே ஓகே சொல்லிவிட்டார். உடனே, தேவுக்கு சுரேஷை கதை சொல்ல சொன்னேன், கதை கேட்டதும் அவருக்கு பிடித்துவிட்டது. இப்படி தான் இந்த படம் தொடங்கியது.

சின்ன வயதில் இருந்தே தேவ் நடனம், பாட்டு என அனைத்தையும் செய்வார், அப்போது என் கலை வாரிசாக இவன் தான் வருவான் என்று நினைத்தேன். ஆனால், பெரிய பையன் ஹீரோவாகி விட்டான், இவன் பைலட்டாகி விட்டான். இன்று இவனே மீண்டும் ஹீரோவாக திரும்ப வந்துட்டான். இப்படி தான் தேவ் நாயகன் ஆனான்.

படத்திற்கு இரண்டாவது ஹீரோவை தேட வேண்டி இருந்தது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர்,
என் பையன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், அவன நீங்க கொஞ்சம் பாருங்க, ஆனால் ஆள் கொஞ்சம் குள்ளமாக இருப்பான்” என்று சொன்னார். அவர் வந்தார், ஆள் நன்றாக இருந்தார், ராப் பாட்டு பாடுகிறார், நன்றாக பேசுகிறார், அவர் இரண்டாவது ஹீரோவுக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது, அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பிறகு நாயகி தேர்வு செய்ய தொடங்கிய போது சுஷ்மிதா வந்தார், கதைக்கு பொருத்தமாக அவர் ஜெயின் பெண் போல் இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பிறகு என் நண்பர் மூலம் டிரம்மராக அறிமுகமாகனவரை படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இப்படி படம் முழுவதும் இளைஞர்கள் தான் பணியாற்றுகிறார்கள். இது முழுக்க முழுக்க யூத்துக்கான படம்.

இன்று ஒரு படம் தயாரிப்பது எளிதாகிவிட்டது, ஆனால் அதை திரைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். அதைவிட கடினம் தியேட்டருக்கு மக்கள் வருவது தான். ஊடகங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நல்லபடியாக எழுதினாலும், தியேட்டருக்கு மக்கள் வருவது பெரிய விசயமாக இருக்கிறது. அதே சமயம், நல்ல படங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் நன்றாக இருந்தது. கமல் சாரின் விக்ரம் அதிரடி ஆக்‌ஷன் படமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியன் 2 படத்தில் என்னை நடிக்க ஷங்கர் அழைத்தார், கால்சீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியவில்லை. படம் பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது. ஷங்கர் படம் போலவே இல்லை, இதை நான் சர்ச்சைக்காக சொல்லவில்லை. சங்கர் என்னுடைய பையன் தான், அவருடன் சேர்ந்து நிறைய பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கிய படம் போலவே இல்லை.
கமல் சார் தனி ஆளாக எவ்வளவு நேரம் தான் படத்தை தாங்குவார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், படம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நன்றாக இல்லை என்றால் மக்கள் நிராகரித்து விடுவார்கள். நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தை ஓட வைப்பதற்காகவோ அல்லது பெரிய படம் என்று காட்டுவதற்காகவோ எதையும் திணிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ, எப்படிப்பட்ட கமர்ஷியல் விசயங்கள் தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு மக்களுக்கு பிடித்த படமாக கொடுத்திருக்கிறோம், நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

என்னுடைய பெரிய மகன் தேஜை வைத்து அடுத்த படம் பண்ண போகிறோம், இந்த நேரத்தில் உதவி இயக்குநர்களுக்கு ஒரு அறிவிப்பு, நல்ல வித்தியாசமான கதை வைத்திருப்பவர்கள் தேஜை சந்தித்து சொல்லலாம், அவருக்கு கதை பிடித்திருந்தால் அந்த படத்தை நாங்களே தயாரிக்க ரெடியாக இருக்கிறோம். அடுத்த மாதத்திலேயே படப்பிடிப்பு தொடங்கவும் தயாராக இருக்கிறோம், ஆனால் கதை தேஜுக்கு பிடிக்க வேண்டும். எனக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கும் பத்திரிகையாளர்கள் எனது பெரிய மகன் தேஜ் மற்றும் குப்பன் நாயகனான எனது இளைய மகன் தேவ் இருவருக்கும் ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் தேஜ் பேசுகையில்,
“அனைவருக்கும் வணக்கம், சிறப்பு விருந்தினர் என்று சொல்லி அழைத்தது எனக்கே கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்னுடைய சப்போர்ட் என் அப்பா, தம்பி இருவருக்கும் எப்போதும் உண்டு. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தது. ‘குப்பன்’ படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். என்னை அப்பா ஹீரோ என்று சொன்னார், ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வரவில்லை. ஒரு சாதாரணமான கதையாக இருந்தாலும் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதில் நான் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. நிச்சயம் அதுபோன்ற கதை எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

இறுதியில் ‘குப்பன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடை பெற விழா முடிவடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles