back to top
9.3 C
New York
Thursday, November 21, 2024

Buy now

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை அதிதி பாலன் பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நான் மிகவும் ரசித்து விருப்பத்துடன் பணியாற்றிய படம் இது.‌ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா திறமையான இயக்குநர். நடிகர்களிடமிருந்து தனக்கு தேவையான நடிப்பை நேர்த்தியாக வாங்கி இருக்கிறார்.  இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நடிகர் நானி சிறந்த மனிதர். சக நடிகர் – நடிகைகளை அன்புடன் நேசிப்பவர். முதலில் அவர் திரையுலகில் படத்தை இயக்குவதற்காக தான் வருகை தந்திருக்கிறார் என்ற விசயம் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளில் நடிக்கும்போது அவர் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார் அது எனக்கு பிடித்திருந்தது.‌

பிரியங்கா மோகனுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதிலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். இந்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னை ஆசீர்வதித்தார்.‌ ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். அற்புதமான படத்துடன் வருகை தந்திருக்கிறோம். இந்தப் படத்தில் மட்டுமல்ல.. படப்பிடிப்பு தளத்திலும் நிறைய பாசிட்டிவிட்டி இருந்தது. நானியை ஈயாக பார்த்திருக்கிறோம். புராண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பரிட்சார்த்த முறையில்  நடித்து வரும் திறமைசாலி.‌  இயக்குநரும் , நடிகருமான எஸ். ஜே. சூர்யாவிடம் ஒரு மேஜிக் இருக்கிறது.‌ அது இந்த படத்திலும் இருக்கிறது.  இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
இயக்குநர் விவேக்- இந்த படத்தில் நாயகனுக்கு அழகான அம்மா கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்.‌ திறமையான இயக்குநர்.  கலைஞர்களிடமிருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை திறமையாக வாங்கி விடுவார்.  அனைவரும் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவை தர வேண்டும்  என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், ” தற்போது நான் நடித்திருக்கும் சூர்யாஸ் சாட்டர்டே எனும் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பிற்காக உங்களை  சந்திக்கிறேன். ‘கேங் லீடர்’ படத்திற்கு பிறகும் நானியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.  இந்தப் படத்தில் சாருலதா என்கிற ஒரு அழகான கதாபாத்திரத்தில் பெண் காவலராக நடித்திருக்கிறேன். இயக்குநர் விவேக் இந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் இந்த கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருக்கும்.

எஸ் ஜே சூர்யாவுடன் ‘டான்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறேன். ஏராளமான சுவாரசியமான திருப்பங்களும் இருக்கும்.‌

அதிதி பாலன் மற்றும் அபிராமியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.

அனைவரும் இந்த படத்திற்காக நேர்மையுடன் உழைத்திருக்கிறோம். ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், ”  நானியை முதலில் வரவேற்கிறேன். அவர் ஏற்கனவே தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் என்றாலும் அவரை மீண்டும் மனதார வரவேற்கிறேன். இங்கு உள்ள குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் நானி பரிச்சயமானவர். பெருந்தன்மையானவர். அற்புதமான நடிகர். தெலுங்கில் அவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என பட்டம் வழங்கி இருக்கிறார்கள்.

‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமான அபிராமி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது. அது வந்து விட்டால்… வாய்ப்புகள் குவியத் தொடங்கும் அது போல் தற்போது அபிராமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மனமார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தெலுங்குகாரராக இருந்தாலும் சென்னையில் படித்த பையன். அதனால் அவர் சென்னை வாசி தான்.  அவருக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- அபிராமி- பிரியங்கா மோகன் -அதிதி பாலன் -என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். நானி சாரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான்.

நானி சார் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கி.. படிப்படியாக உயர்ந்து இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடம் ஏராளமான அன்பை சம்பாதித்து இருக்கும் ஒரு நட்சத்திர நடிகர்.‌ தமிழ்நாட்டிலும் அவர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார்.

எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அண்மையில் ‘ராயன்’ வெளியானது. பெரும் வெற்றியை பெற்றது. எனக்கும் நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது.  அதைத்தொடர்ந்து ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படம் வெளியாகிறது.‌

நான் ஏன் இந்த படத்தை ராயனுடன் ஒப்பிட்டு பேசுகிறேன் என்றால்.. அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக்கதை இருக்கிறது.

இதுவரை பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திற்கும் அடிப்படை மாணிக்கம்- பாட்ஷா தான். இதை வைத்து தான் அனைத்து ஆக்சன் படங்களும் உருவாகின்றன. மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படை தான் இருந்தது. அதாவது பாட்ஷாவாக இருப்பார். ஆனால் சூழ்நிலைக்காக தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மாணிக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பார். இது எப்போதும் வெற்றி பெறும் சினிமா சூத்திரம்.

இந்த தருணத்தில் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த ஃபார்முலாவில் வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார். அது என்னவெனில் ஒரு பையன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்று சொன்னால் அவன் கேட்பதாக இல்லை. அதனால் அவனது தாயார், ‘நீ கோபப்படு.‌ அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோபப்படாதே. வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என சொல்கிறார். அது என்ன கிழமை என்றால் சனிக்கிழமை அது ஏன் என்பதற்கு நீங்கள் படத்தை பார்த்தால் புரியும்.

அதனால் இந்த படத்தில் கதையின் நாயகனான சூர்யா ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கோபமே படாமல் இயல்பான மனிதனாக இருப்பார். அதாவது மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் அவர் பாட்ஷாவாக மாறுவார்.  இதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட்.

இது ஹீரோவின் கோபத்தை உணர்த்துகிறது. அதே போல் இந்த படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு கோபம் இருக்கிறது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விசயம் கிடைக்காததால் நான் அரக்கத்தனமாக நடந்து கொள்கிறேன். இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால் … என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இதனை இயக்குநர் விவேக் ஆத்ரேயா நேர்த்தியாகவும் அழகாகவும் அற்புதமாகவும் திரையில் செதுக்கியிருக்கிறார்.

கடந்த காலங்களில் நாகார்ஜூனா நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘உதயம்’ படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ… அது போன்றதொரு வித்தியாசமான அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம்தான் இது. அதனால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் நானி பேசுகையில், ” ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன்.‌ இங்கு மணி சார் ..ஷங்கர் சார்.. பாரதிராஜா சார்.. என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள்.

நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன்.‌ குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிப்பேன்.‌

சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும்.. நலம் விசாரிப்பதாகட்டும்..  அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது.  தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம்.  பொதுவாக இந்த கால ரசிகர்களுக்கு ஆக்சன் படம் என்றால் பிரம்மாண்டமானதாகவும் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும் . அந்த பாணியில்  ஏராளமாக படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம்.  அந்த வகையில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ எளிமையான ஆக்சன் என்டர்டெய்னர்.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தமிழ் மக்களின் உணர்வு… தெலுங்கு மக்களின் உணர்வு … என பாகுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய திரை மொழி தனித்துவமானது. அனைவருக்குமானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ் ஜே சூர்யாவுக்கு தான் பொருத்தமானது.  என்னைப் பொறுத்தவரை இது எஸ் ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவும். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதற்காகவும், நடித்ததற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் படத்தில் அவருடன் நடித்த போது சில விசயங்களை கற்றுக் கொண்டேன்.

பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் நேச்சுரல் ஸ்டார். அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.‌ அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.

அதிதி பாலன்- பத்ரா எனும் கதாபாத்திரத்தில் என்னுடைய சகோதரியாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடனும் இணைந்து நடித்ததற்காக பெருமிதம் அடைகிறேன்.‌ இந்தப் படத்தில் நான் -அதிதி பாலன்- பிரியங்கா மோகன் -அபிராமி -சாய்குமார் – குடும்பமாக நடித்திருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் அவருக்கு ஏராளமான சிக்கல்கள் இருந்தாலும் சிரித்தபடியே நடித்துக் கொடுத்தார்.

அபிராமி – கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதை ரசிகர்களும் திரையில் பார்த்து பாராட்டினை தெரிவிப்பார்கள்.

சூர்யா சாட்டர்டே தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து விட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுவம் விநியோகஸ்தர் சுப்பையாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles